Wednesday 7 August 2013

ஒரு இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்!!!

தமிழ்நாட்டு ஆசிரியர் சங்கங்களில் வலுவானதும் வலிமையானதும் ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்கள்தான். தற்பொழுது 6வது ஊதியக்குழுவில் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருப்பவனும் இடைநிலை ஆசிரியர்தான். அனைத்து சங்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அரசாங்கம் இந்த விசயத்தை பற்றி யோசிக்க தொடங்கியிருப்பதாக வந்துள்ள செய்தி ஒரளவு ஆறுதல் அளித்தாலும் சங்கங்கள் தங்களிடம் உள்ள காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை அறிவித்தால் நிச்சயம் அரசாங்கத்தின் பார்வையை நம் பக்கம் திருப்பலாம். கடுமையான போராட்டங்கள் இல்லாமல் தீர்வு என்பது எட்டாக்கனியாகி விடும். பல ஆசிரியர்கள் மனக்குமுரல்களை நம்மிடம் தொடர்ந்து கொட்டி வருவதை சங்க தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. எத்தனையோ போராட்ட வடுக்களை தாங்கிய தலைவர்களை பெற்றுள்ள இயக்கங்கள் இதற்கான முன் வடிவை எடுக்க வேண்டும். கடந்த கால ஒன்றுபட்ட போராட்டங்களில் நடந்தது போல் அல்லாமல் களத்தில் சூடு குறையாமல் கடைசி வரை போர்குணமிக்க வீரர்களாய் களம் காண்போம். வெற்றி கிட்டும் வரை போராடுவோம். இறுதி வெற்றி நமதே என்ற இலட்சிய வாசகத்தை மனதில் தாங்கி களம் காண எத்தனையோ இலட்சம் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இயக்கத்தலைவர்களே ஒன்றுபடுங்கள். ஒன்று திரட்டுங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சணை தீராமல் இனி தமிழ்நாட்டில் இயக்கம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும்.  நாம் சேர்ந்து அழுவோம். நம் அழுகுரல் ஆட்சியாளர்களின் செவிப்பறையை தட்டட்டும். தொடர்ந்து ஏமாறுவதற்கு இடைநிலையாசிரியர்கள் ஒன்றும் புரியாதவர்கள் அல்ல. நமது ஒன்றுபட்ட சக்தி என்பது நிச்சயம் நம் துயரோட்டும். 
மத்திய மாநில அரசுகளோ தாராளமயம். தனியார்மயம்உலகமயம் அகியவற்றின் தாக்குதல்களால் நிலைதடுமாறிப் போயிருக்கின்ற – போராட்ட உணர்வு மழுங்கிப் போய் நிற்கின்ற மக்கள் விழித்தெழமாட்டர்கள் எனக்கனவு காண்கிறது.
மரம் சும்மா இருந்தாலும் கற்று அதைச் சும்மா இருக்கவிடாது.
ஒய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல: தியானம்.
பின் வாங்கல் அல்ல பதுங்கல்
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்
(நன்றி: கவிதை : பசுவய்யா) .

இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம்

ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது. 

இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. 
நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 
அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.ஆசிரியர்களே, சிந்திப்பீர்!

ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்க தடை :அரசு அதிரடி உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தொலைதூரக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.

உயர்கல்விக்கு ஊக்கத்தொகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்தகுதியை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வகையில் அவர்களின் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம். (ஒரு ஊக்க ஊதியம் என்பது 2 இன்கிரிமென்ட் ஆகும்).
உதாரணத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தால் ஒரு ஊக்கத்தொகையும், பி.எட். முடித்தால் இன்னொரு ஊக்கத்தொகையும் பெறலாம். அதாவது அந்த ஆசிரியருக்கு 4 இன்கிரிமென்ட்டுகள் வழங்கப்படும். ஒரு இன்கிரிமென்ட் என்பது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் (கிரேடு பே) 3 சதவீதத்தை குறிக்கும்.
விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்க தடை
இதேபோல் பட்டதாரி ஆசிரியர் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் பெற்றால் இதேபோல் 2 ஊக்க ஊதியங்களை பெறுவார். அண்மையில் அவர்களுக்கு எம்.பில். பி.எச்டி. படிப்புகளுக்கும் ஊக்க ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டது. நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு படிக்கச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு 50 சதவீத அடிப்படை சம்பளமும், முழு அகவிலைப்படியும் சம்பளமாக வழங்கப்படும்
இந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பட்டப்படிப்போ, பட்ட மேற்படிப்போ, பி.எட். படிப்போ படிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொலைதூரக்கல்வி படிக்கலாம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த காலங்களை விடுமுறை விடுப்பு நீங்கலாக, அவர்களின் கணக்கில் இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த அலுவலின் பேரில் ஈட்டா விடுப்பு வழங்கியும் அந்த விடுப்புகள் போக மீதி நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கியும் முறைப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த அனுமதியானது அரசாணை வெளியிடப்படும் நாளுக்கு முந்தைய நாளில் (22.7.2013) நேரடி சேர்க்கை மூலம் பி.எட். படித்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகள் படிக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பில் செல்ல அனுமதி வழங்கி அவர்கள் நேரடி சேர்க்கை மூலம் படிக்க செல்வதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பி.எட், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்க அனுமதி வழங்குவதை தவிர்க்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

TNPTF மறியல் செய்தியறிக்கை

டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

சென்னை: "வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர்.
முதல் தாள் தேர்வு, 870 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. ஏழு லட்சம் பேர், தேர்வை எழுதுவதால், தேர்வை கண்காணிப்பதற்கு, டி.ஆர்.பி., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார் பதவியேற்றுள்ள நிலையில், டி.இ.டி., தேர்வு, விரைவில் நடக்க உள்ளது.
தேர்வு ஏற்பாடுகள் குறித்து, விபு நய்யார் கூறியதாவது: அதிகமான தேர்வர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை, முழுவீச்சில் செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட எஸ்.பி., மற்றும் மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இவ்வாறு, விபு நய்யார் கூறினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆண்டுக்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு செய்யும் பணியை செய்து வருகிறது. ஆனால், இந்த அமைப்பில், போதுமான பணியாளர்கள் இல்லாத நிலை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க, இதுவரை பதவியில் இருந்த தலைவர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பதவியேற்றுள்ள புதிய தலைவராவது, பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கவும், டி.ஆர்.பி.,யின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.