Tuesday 1 October 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்1, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

அதேபோல், 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்&2ஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இரண்டு தேர்வுக்களுக்குமான கீ ஆன்சரைகடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால், டி.ஆர்.பி. வெளியிட்ட கீ ஆன்சரில்ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும், சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும், தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும், புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது, தவறான கேள்விகளுக்கு கூடுதல் மார்க் வழங்கப்படுமா என்றும் தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு குறித்து டி.ஆர்.பி. அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் அனைத்தும் திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், புதிய கீ ஆன்சர் பற்றிய வெளியீடும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது. 

ஆனால், தகுதித் தேர்வு முடிவு வெளியிடுவது தாமதமாவதற்கு முக்கியமான காரணம், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தமிழ்ப் பாடத்தில் 40 கேள்விகள் தவறானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளதுதான். இந்தவழக்கு தொடர்பாக அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் டி.ஆர்.பி. தெரிவித்துவிட்டது. இந்த வழக்கின் முடிவு இந்த மாதம் 30ம் தேதி தெரிந்துவிடும். அந்த முடிவு வந்தவுடன், அக்டோபர் முதல்வாரத்தில், தயார் நிலையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ என்றார்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் வருமாறு...
1. பிஎட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பிஎட் ., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.

2. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

3. பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.

4. முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.

5. தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப்பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.