அரியானாவைச் சேர்ந்த, பஞ்சாயத்து அமைப்பு, தங்கள் பகுதிகளில் நடக்கும் பள்ளி விழாக்களில், மாணவியர் நடனமாடுவதற்கு தடை விதித்துள்ளது.
பெண் குழந்தைகளை நடனமாட வைப்பது, அவர்களின் வாழ்க்கையை தவறான பாதைக்கு
திசை திருப்பி விடும் என, அந்த பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர். அரியானா
மாநிலம், ஜாதி அமைப்புகளால் நடத்தப்படும், பஞ்சாயத்துக்களுக்கு பெயர்
பெற்றது. இந்த ஜாதி பஞ்சாயத்து அமைப்புகள், காதல் திருமணங்களை கடுமையாக
எதிர்க்கின்றன. தங்களின் உத்தரவை மீறி, கலப்பு திருமணம் செய்வோரை, கவுர
கொலை செய்வதற்கும், இந்த அமைப்புகள் தயங்குவது இல்லை.
இந்த ஜாதி பஞ்சாயத்து அமைப்புகள், சட்டபூர்வமானவை அல்ல. ஆனால்,
சட்டபூர்வமாக, தேர்தல் மூலம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி
நிர்வாகங்களும், இது போன்ற தடாலடியான காரியங்களில் இறங்கி, அதிரடி உத்தரவை
பிறப்பிக்க துவங்கியுள்ளன. அரியானா மாநிலத்தில் உள்ள, கினானா என்ற கிராம
பஞ்சாயத்து கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவு
குறித்து, பஞ்சாயத்து நிர்வாகி, ராஜாராம் கூறியதாவது: பள்ளிகளில், கலாசார
விழாக்கள் என்ற பெயரில், நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவற்றில், பெண்
குழந்தைகளையும், நடனமாட வைக்கின்றனர்.
இது, தவறான அணுகுமுறை. பெண் குழந்தைகளை நடனமாட வைப்பது, அவர்களின்
வாழ்க்கையை, தவறான பாதைக்கு திசை திருப்பி விடும். இதுபோன்ற நடன
நிகழ்ச்சிகளை பார்ப்போரை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட
வைப்பதற்கும், இது முக்கிய காரணமாக உள்ளது. இளைஞர்களின் மனதில், தவறான
கருத்துகளை பதிய வைப்பதற்கு, இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் காரணமாக
இருக்கின்றன.
பெண் குழந்தைகளை, கல்வி பயில்வதற்காக தான், பள்ளிக்கு அனுப்புகிறமே
தவிர, கலாசார விழாக்கள் என்ற பெயரில், நடனமாட வைப்பதற்கு அல்ல. இது
தொடர்பாக, எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, அனைத்து பள்ளிகளுக்கும்,
கடிதங்கள் எழுதியுள்ளோம்.இவ்வாறு, ராஜாராம் கூறினார். இது குறித்து, ரோகத்
மாவட்ட கல்வி அதிகாரி, வந்தனா கூறுகையில், இது தொடர்பாக, எங்களுக்கு எந்த
புகாரும் வரவில்லை. புகார் தெரிவிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்போம்,
என்றார்.
No comments:
Post a Comment