"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த
பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
முதுநிலை ஆசிரியை (ஆங்கிலம்) பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர்
விண்ணப்பித்து இருந்தார். இவர், 2001ம் ஆண்டு, பி.எஸ்சி., (இயற்பியல்),
2003ம் ஆண்டு எம்.ஏ., (ஆங்கிலம், 2009-10ம் ஆண்டில், பி.எட்., படிப்பு,
2011ம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ.,
(ஆங்கிலம்) படித்தார். பி.எட்., படிக்கும் போது, பி.ஏ., ஆங்கிலப் படிப்பும்
படித்து, இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார்.
எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெற்றதால், சென்னை
பல்கலைக்கு, இந்தப் பிரச்சனையை, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது. ஒரே
ஆண்டில், பி.எட்., மற்றும் பி.ஏ., பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அதற்கு
பல்கலையின் அங்கீகாரம் இல்லை என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "முதுநிலை
ஆசிரியை பணிக்கு, ஜெகதீஸ்வரிக்கு தகுதியில்லை" என, ஆசிரியர் தேர்வு
வாரியம் தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஜெகதீஸ்வரி
மனுத் தாக்கல் செய்தார். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தன்னைத்
தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் என, கோரியிருந்தார். இந்த மனுவை,
நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்,
கூடுதல் அரசு பிளீடர் பி.எஸ்.சிவசண்முகசுந்தரம் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த
உத்தரவு: வெவ்வேறு பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட தகுதி, தரத்தை நிர்ணயிக்க,
பணி வழங்குபவருக்கு உரிமை உள்ளது. பல்கலைக்கழகங்கள், வெவ்வேறு விதமான
படிப்புகளை, ஓட்டல்களில் வழங்கப்படும் "பஃபே" உணவு வகைகள் போல்
வழங்குகிறது. இத்தகைய படிப்புகளுக்கு, பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம்
வழங்குகிறது.
வரிசைப்படி தான் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லை. மதிய உணவின் போதோ, டின்னரின் போதோ, சில ஒழுங்குமுறைகள்
கடைபிடிக்கப்படுகின்றன. உணவிற்கு முன், ஆரம்பமாக "ஜூஸ்" அல்லது "சூப்"
சாப்பிடுகிறோம். பின், உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு, இறுதியில் பழங்கள்
சாப்பிடுகிறோம். உணவு முறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, யாரும்
கடைசியில் துவங்கி, முன் நோக்கி செல்வதில்லை.
கல்வி துறையில், ஒருவர் விரும்பும் எந்தத் துறையிலும்,
வெவ்வேறு வகையான படிப்புகளை, அவர் விரும்பும் வரிசையில் படிக்க,
பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கிறது. ஒரே நேரத்தில், 2 குதிரைகளில் சவாரி செய்ய
அனுமதிக்கிறது. இதனால், கல்வியின் தரம் தான் பாதிக்கப்படுகிறது. இத்தகைய
ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்த முடிவை,
அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஒரு முடிவு தன்னிச்சையாக இருந்தாலோ, சட்ட விரோதமாக
இருந்தாலோ, அரசியல் அமைப்பு உரிமையை மீறியதாக இருந்தாலோ ஒழிய, மனுதாரர்
கோரியபடி, உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, "ஒரே நேரத்தில் வெவ்வேறு
பட்டப்படிப்புகளை படித்தவர்களின், விண்ணப்பங்களை ஏற்கக் கூடாது" என,
ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்த நிலைப்பாடு சரியானது தான். அதில்,
குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு,
நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment